Nov 26, 2012

இதுவரை இழந்தவை...


இருந்தும்  இல்லாமலேயே  போய்விட்ட
என் அப்பா 
இறுதிவரை என நினைத்து இடையில் போன
(சில) நண்பர்கள்.
வார்த்தைகளில் சொல்லிவிட  முடியாத  என்
முதற்காதல் 
இருப்பதில் அர்த்தமில்லை என ஒதுக்கிய
சொந்தங்கள்
கை மேல் இருந்து கைநழுவிப்போன
கணிதம்
கனவாய் இருந்து கனவாகவே கலைந்த
பல்கலை.
இளமையின் வேகத்தில் இழந்த கொஞ்சம் (அல்ல நிறையவே)
ரத்தம்.
வைத்திருந்து பிரயோஜனமில்லை  என வழியில் விட்ட
குழந்தை மனம்.
காலம் தன்னுடன் கொண்டுபோய்விட்ட
சில  முகங்கள்.  
பைத்தியமாய் திரிந்து, நடை பிணமாய் வாழ்ந்த
நாட்கள்
கடந்த  நினைவுகளில் இன்றும் தொலையும்
நிமிடங்கள்
எப்போது   இழந்தோம் எனத் தெரியாமலே போய்விட்ட
பாதி இளமை 
ஏதோ காரணத்தால் ஏதோவொரு திருப்பத்தில் தொலைத்துவிட்ட
'நான்'
ஹம்ம்..  வாழ்வின் நினைவுகளில் நீந்தி நிகழ்  திரும்பும்போது,
எங்கோ இருந்து, ஏக்கத்துடன் 
கனத்து வரும் பெருமூச்சில்,...
இன்னும் எத்தனை எத்தனையோ..!